தூத்துக்குடி – ஜீன் -21,2023
newz – webteam
தூத்துக்குடி பாத்திமா நகர் பெண்களிடம் தூத்துக்குடி சோஷியல் சர்வீஸ் சொசைட்டி சார்பாக போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி பாத்திமாநகர் பகுதி பெண்களிடம், பாத்திமா நகர் சமுதாயநலக் கூடத்தில் வைத்து தூத்துக்குடி சோஷியல் சர்வீஸ் சொசைட்டி சார்பாக போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், இந்த போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சமுதாயத்தின் மேல் உள்ள உங்களின் சமூக அக்கறையை எடுத்துகாட்டுகிறது. மேலும் இந்த சமூக அக்கறையை நான் மிகவும் பாராட்டுகிறேன். இந்த போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து நீங்கள் உங்களுடைய உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கண்டிப்பாக எடுத்துரைக்க வேண்டும். தற்போது நடக்கும் பல குற்ற செயல்களில் சில, போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களால் நடக்கிறது. தற்காலங்களில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதால் உடல் ஆரோக்கியம் கெட்டு சிறு வயதிலேயே உயிரிழக்கிறார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தாலே மனமும் ஆரோக்கியமாக இருக்கும். நமது சிந்தனைகள் நேர்மையானதாக இருந்தாலே நாமும் நலமுடன் இருப்போம். குழந்தைகளை செல்போனில் விளையாடுவதை விட வெளியில் உங்களது கண்காணிப்பில் விளையாட அனுமதியுங்கள். அவ்வாறு விiளாட்டுகளில் ஈடுபட்டால் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தோடு எந்த செயல்களிலும் முழு ஈடுபாட்டுடன் வெற்றி பெறுவார்கள். இளைஞர்கள் போதை பழக்கத்தால் குற்ற செயல்களில் ஈடுபடுவதால் அவர்களது எதிர்காலம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை சார்ந்த குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள். கோபத்தினால் ஒருவன் குற்ற செயலில் ஈடுபட்டு சிறை செல்வதைவிட, தனது குடும்பத்திற்காக தன்னை கட்டுபடுத்தி தன் கோபத்தை கட்டுபடுத்தி பிறரிடம் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் இருப்பவன்தான் உண்மையான வீரன் ஆவான். இளைஞர்கள் போதை பொருட்கள் உபயோகிப்பதால் சிறுவயதிலேயே ஆரோக்கித்தை இழந்து வலிமை இழந்து வயதானவர்கள் போல் மாறிவிடுகிறார்கள். அதனால் பெண்களாகிய நீங்கள் உங்களது உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் இதைப்பற்றி எடுத்துரைத்து அவர்கள் தவறான வழிகளில் செல்லாமல் பாதுகாக்க துணையாக இருக்கவேண்டும். போதை பொருட்களை அளவுக்கதிமாக உபயோகிப்பதால் இளம் வயதிலேயே ஆண்மையை இழந்து உடல் நலக்குறைவுக்கு காரணமாகிவிடுகிறது. மாத்திரைகளும் ஊசிகளும் கசப்பாக இருந்தாலும், அதுதான் நோய் தீர்க்கும் மருந்தாகும், அதுபோல வாழ்க்கையில் உண்மையையும், நேர்மையும் கடைப்பிடித்தால் மட்டுமே வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியும். குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் சொல்லுக்கு கட்டுபட்டு நடந்தால் மட்டுமே வாழ்க்கையில் சிறப்பான இடத்தை அடைய முடியும்.
குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள், கல்வி வாழ்வில் மிகப்பெரிய சொத்தாகும், கல்வியோடு விளையாட்டும் குழந்தைகளுக்கு முக்கியமானதாகும். அதனால் குழந்தைகளை விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள். குழந்தைகளுக்கு நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து வளருங்கள். போதை பொருட்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அனைவருக்கும் எடுத்துக்கூறி தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லா மாவட்டமாக உருவாக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.
மேலும் பாத்திமாநகர் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மாவட்ட காவல்துறை மூலம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி சோஷியல் சர்வீஸ் சொசைட்டியின் பங்கு தந்தை அமலன், பங்கு தந்தை ஜெயந்தன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், வடபாகம் காவல் நிலை ஆய்வாளர் பிரேம் ஆனந்த் உட்பட காவல்துறையினர் மற்றும் துணை மேயர் த ஜெனிட்டா உட்பட பாத்திமாநகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments