தூத்துக்குடி – செப்-21,2023
newz – webteam
தூத்துக்குடி மாவட்டத்தில், ஏர்போர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூபாய் 17 லட்சம் மோசடி செய்தவர் கைது – சைபர் குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை.
தூத்துக்குடி புதுக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்த பரமசிவம் மனைவி ராணி என்பவரின் செல்போன் எண்ணுக்கு திருச்சி ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதை பார்த்த மேற்படி ராணி தனது மகனின் வேலைக்காக அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, அதில் மோசடி செய்பவர்கள் பல்வேறு காரணங்களை கூறி ரூபாய் 16,61,038/- பணத்தை மோசடியாக பெற்று ஏமாற்றியுள்ளனர். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி ராணி இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.
மேற்படி ராணி அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் சஞ்சய்குமார் இ.கா.ப , சைபர் குற்ற பிரிவு காவல் கண்காணிப்பாளர் தேவராணி இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான சைபர் குற்ற பிரிவு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மேற்படி ராணியிடம் பணம் மோசடி செய்தவர் டெல்லி, ஜமீயாநகர் பகுதியை சேர்ந்த மொஹத் காலிக்கான் மகன் மொஹத் அபுஷார்கான் (22) என்பது தெரியவந்தது.
உடனே மேற்படி தனிப்படை போலீசார் டெல்லி சென்று எதிரி மொஹத் அபுஷார்கானை கடந்த 17.09.2023 அன்று புதுடில்லி ஷாஹீன்பாக் காவல் நிலையம் முன்பு கைது செய்து, டெல்லி நீதிமன்றத்தில் (THE HON”BLE COURT OF MS CHHAVI BANSAL, M.M, SAKET COURT SOUTH DELHI)ஆஜர்படுத்தி Transit Warrant பெற்று பின்னர் இன்று தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் – IV ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில் எதிரி மொஹத் அபுஷார்கான், பொதுமக்களிடம் மோசடியாக பணத்தை பெற்று, மற்ற எதிரிகளின் வங்கி கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்து கமிஷன் தொகை பெற்றுள்ளார் என்பதும், அதேபோன்று இவரது அண்ணன் வங்கி கணக்குகளிலும் மோசடி செய்த பணத்தை பெற்று பணப்பரிமாற்றம் செய்து கமிஷன் தொகை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது. மேலும் இந்த மோசடியில் பலநபர்கள் ஈடுபட்டிருப்பதால், அவர்களை கைது செய்யும் பொருட்டு சைபர் குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments