சென்னை – ஜன -05,2024
Newz – webteam
லோக்சபா தேர்தலையொட்டி தமிழகம்
முழுவதும் 1,847 காவலர்கள் பணியிடமாற்றம் டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு
லோக்சபா தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் 1,847 காவலர்கள், தலைமைக்காவலர்கள், முதல்நிலைக் காவலர்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்குவதையொட்டி அதற்கான பணிகளில் தமிழக காவல்துறை மும்முரமாக இறங்கியுள்ளது. தேர்தல் சமயத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வந்த போலீசார் அங்கு பணியில் நீட்டிக்க கூடாது. அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பான விதிமுறைகளை கடிதமாக டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாக பணிபுரியும் போலீசாரை இடம் மாற்றம் செய்வது தொடர்பான பட்டியல்களை தயாரித்து அனுப்பும்படி டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.
அது தொடர்பான பணிகளில் தமிழக காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள், கமிஷனரேட்டுக்களில் பணிபுரியும் காவலர்கள் முதல் தலைமைக்காவலர்கள், முதல்நிலைக் காவலர்கள் என மொத்தம் 1847 பேரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் பணிபுரியும் காவலர்களை வெளி மாவட்டங்களுக்கும், வெளிமாவட்டங்களில் பணிபுரியும் காவலர்கள் சென்னை நகருக்கும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 Comments