மதுரை – ஜன -29,2023
Newz – webteam
விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்; உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
விசாரணை கைதிகளின் பல் பிடுங்கபட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில், வழக்குகளில் விசாரணைக்காக வருபவர்களிடம் விசாரணை நடத்தும் பொழுது, ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் பல்லைப் பிடுங்கி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக பல்வீர் சிங் உட்பட 15 பேர் மீது சிபிசிஐடி போலீசார் நான்கு வழக்குகள் பதிவு செய்தனர். இதனையடுத்து இந்த குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பொய்யான வழக்குப்பதிவு செய்து, சட்ட விரோத காவலில் வைத்த காவல்துறை தன்னை கடுமையாக தாக்கினர். அப்போது தன்னுடைய நான்கு பற்கள் உடைக்கப்பட்டன. இதில் தான் மட்டுமன்றி விசாரணை கைதிகள் சிலரது பற்களை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பிடுங்கி சித்ரவதை செய்தார் என கூறினார்.
அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மார்ச் 10 ஆம் தேதி கண்காணிப்பு கேமராவில்
பதிவான சிசிடிவி காட்சிகளை தனக்கு வழங்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக
உயர்மட்ட குழு விசாரணை அதிகாரியான அமுதா மற்றும் திருநெல்வேலி சார் ஆட்சியர்
விசாரணை அறிக்கைகளை தனக்கு வழங்க கோரி அருண்குமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி
தமிழ்நாடு அரசின் சிறப்பு விசாரணை அதிகாரியான அமுதா ஐஏஎஸ் அதிகாரியின் விசாரணை அறிக்கை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. மேலும் சிசிடிவி சம்பந்தமான அறிக்கை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹென்றி இந்த வழக்கு விசாரணையின்
போது உயர் நீதிமன்றத்தில் அமுதா ஐஏஎஸ் அறிக்கை தருவதாக ஏற்கனவே அரசு தரப்பில்
உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி இளங்கோவன் கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமுதா ஐஏஎஸ் அறிக்கையை மனுதாரர் வசம் கொடுக்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் சிசிடிவி காட்சிகள் வழங்க வேண்டும் என்ற மனுவில் உரிய
உத்தரவு வழங்குவதாக கூறி வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.
0 Comments