தாம்பரம் – ஜீலை -03,2025
Newz – Webteam



தாம்பரம் மாநகர காவல்துறை, குழந்தைகள் பாதுகாப்பிற்கான மிக முக்கியமான முயற்சியாகவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளை தகுந்த முறையில் கையாளும் நோக்கத்துடனும் போதை பொருட்கள் பயன்பாட்டிற்குட்பட்ட குழந்தைகளை அதிலிருந்து மீட்கவும் “தளராத தளிர்கள்” எனும் சிறப்பு ஆலோசனை மையத்தை துவக்கியுள்ளது.
இந்த மையம் பெரும்பாக்கம் TNUHDB-இல் உள்ள பிளாக் எண் 30-ல் இயங்குகிறது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உளவியல் மற்றும் உணர்ச்சிசார் ஆதரவை வழங்கும் நோக்கத்துடன் இந்த மையம் துவக்கப்பட்டுள்ளது. குழந்தைகளும், அவர்களின் குடும்பத்தினரும் பாதுகாப்புடன், மரியாதையுடனும், தனியுரிமை உறுதியுடனும் கையாளப்படுவர்.
இந்த போக்சோ ஆலோசனை மையம், மாவட்ட குழந்தை நல குழுமம் (CWC), மாவட்ட சமூக நலத்துறை, மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் நெருங்கிய இணைப்பில் செயல்படும். இது குழந்தைகளுக்கான மன உளைச்சலற்ற சூழலையும், குழந்தைகள் நட்பான முறையில் அணுகப்படுவதையும் உறுதி செய்கிறது.
மையத்தின் முக்கிய அம்சங்கள்:
- சமூக நலத்துறையைச் சேர்ந்த மூத்த ஆலோசகரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.
- பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு சம்பவத்துக்குப் பிந்தைய மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆதரவு வழங்கப்படும்.
- தனியுரிமை மற்றும் பாதுகாப்பு உறுதியளிக்கும் வகையில் குழந்தைகளுக்கு நட்பான சூழல் அளிக்கப்படும்.
- பாலியல் குற்றங்களுக்கு எதிரான மற்றும் போதைப்பொருட்களின் பயன்பாட்டைத் தடுக்க ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு வழங்கப்படும்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமூக தலைவர்களை இந்த மையம்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் கலந்து கொண்டு, பாதுகாப்பும் ஆதரவும் தேவைப்படும் குழந்தைகளை இந்த மையத்திற்கு பரிந்துரை செய்யுமாறு தாம்பரம் மாநகர காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
இந்த புதிய முயற்சி, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பும் நீதியும் உறுதி செய்ய காவல்துறையின் உறுதியான அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது.
0 Comments