தூத்துக்குடி – அக் -17,2025
Newz – Webteam


தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்த முயன்ற ₹30 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் – ஓட்டுநர் கைது
தூத்துக்குடி, அக். 17:
தூத்துக்குடி அருகே இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட சுமார் ₹30 லட்சம் மதிப்பிலான 30 மூட்டை பீடி இலைகளை ‘Q’ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் இன்று அதிகாலை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாகனத்தின் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட ‘Q’ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் திருமதி விஜய் அனிதா அவர்களுக்கு, கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சி ராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர், இன்று (17.10.2025) அதிகாலை 3:45 மணியளவில், தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விவேகானந்தர் காலனி கடற்கரைப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த TN 69 AM 5485 என்ற பதிவெண் கொண்ட டாடா ஏஸ் (TATA ACE) சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த வாகனத்தில், இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட, தலா 30 கிலோ எடை கொண்ட 27 பீடி இலை மூட்டைகளும், 3 கட்டிங் பீடி இலை மூட்டைகளும் என மொத்தம் 30 மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி டேவிஸ்புரம், கருப்பசாமி நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் உமா விஜயகுமார் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட பீடி இலை மூட்டைகளின் மொத்த மதிப்பு சுமார் ₹30 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார், யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்பது குறித்து ‘Q’ பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments