சென்னை -ஜீலை -22,2024
Newz -webteam
நேரடியாக நியமிக்கப்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்களின் ஓராண்டு அடிப்படைப் பயிற்சிக்கான தொடக்க விழா.
இன்று சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 15 ஆண் மற்றும் 7 பெண் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் அடங்கிய மொத்தம் 22 பயிற்சியாளர்களைக் கொண்ட பதிமூன்றாவது பயிற்சி குழுமத்திற்கு ஒரு வருட அடிப்படைப் பயிற்சி தொடங்கப்பட்டது. இதுவரை உயர்பயிற்சியகத்தில் பன்னிரெண்டு குழுமத்திற்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அதில் 273 நேரடியாக நியமிக்கப்பட்ட துணைக் கண்காணிப்பாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
விழாவில் சங்கர் ஜிவால், இ.கா.ப., காவல் துறை இயக்குநர் மற்றும் காவல் படைத்தலைவர் தொடக்கவுரையாற்றினார். பயிற்சியாளர்கள் காவல்துறை சேவையின்போது அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் கடமைகளில் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துமாறு வலியுறுத்தினார்.
சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., காவல்துறை இயக்குநர் பயிற்சி, கூடுதல் பொறுப்பு இயக்குநர், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் அவர்கள், உயர் பயிற்சியகத்தில் உள்ள வசதிகள் மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள பயிற்சி குறித்து சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைந்த சைபர் வளாகம் மற்றும் சமூக காவல் வள மையத்தின் திட்டங்களை தமிழ்நாடு உயர்பயிற்சியகத்திற்கு வழங்கியதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
காவல்22 துணைக் காவல் கண்காணிப்பாளர்களின் குழுவில் பலதரப்பட்ட வல்லுநர்கள் உள்ளனர்: இதில் ஒருவர் முனைவர் பட்டமும் (Ph.D), ஒருவர் கால்நடை மருத்துவ பட்டப்படிப்பும், 14 பொறியியல் பட்டதாரிகளும், 2 முதுநிலை பட்டதாரிகளும் மற்றும் 4 இளநிலை பட்டதாரிகளும் உள்ளனர். இவர்களில் ஏற்கனவே 10 நபர்கள் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றவர்கள், ஒருவர் தனியார் நிறுவனத்திலும் மீதமுள்ள 11 நபர்கள் முதல் முறையாக தங்கள் பணியை தொடங்கியுள்ளார்கள்.
52 வார உள்ளரங்கு பயிற்சித் திட்டம், பயிற்சி பெறுபவர்களுக்கு அவர்களின் பணிக்கு தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தில் சட்டம், அறிவியல் சார்ந்த விசாரணை, நவீன கணினிமயமாக்கப்பட்ட காவல், உள்நாட்டு பாதுகாப்பு, உளவுத்துறை, சமூக காவல், தலைமை, தகவல் தொடர்பு திறன், சைபர் கிரைம் விசாரணை மற்றும் CCTNS செயல்பாடுகள் போன்றவைகள் உள்ளன.
இந்த வகுப்புகள் தமிழ்நாடு காவல் உயர்பயிற்சிகத்தின் திறமையான சட்ட பயிற்றுவிப்பாளர்களுடன் மற்ற தேர்ச்சிபெற்ற நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களால் நடத்தப்படும்.சட்ட வகுப்பு பயிற்சியுடன், பயிற்சியாளர்களுக்கு ஆயுதம் கையாளுதல், கராத்தே, யோகா, விளையாட்டு, நீச்சல் மற்றும் ஓட்டுநர் பயிற்சி போன்ற வெளியரங்க செயல்பாடுகளிலும் நுட்பமாகப் பயிற்சி அளிக்கப்படும்.
தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையுடன் (STF) இணைந்து 10 நாள் சிறப்புப் பயிற்சியில் வனப் பகுதிகளில் வரைபட ஆய்வு, முகாம் பாதுகாப்பு, வழிகாட்டும்முறை, மலை ஏறுதல் ஆகியவை பயிற்றுவிக்கப்படும். முக்கிய பாதுகாப்பு பணி மற்றும் முக்கிய பிரமுகர்களில் வருகையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரடியாக அழைத்து செல்லப்பட்டு களப்பயிற்சியும் பெறுவார்கள்.
இந்நிகழ்ச்சியில், தேன்மொழி, இ.கா.ப., கூடுதல் இயக்குநர். தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகம் வரவேற்புரை வழங்கினார் மற்றும் செல்வநாகரத்தினம், இ.கா.ப., துணை இயக்குநர், தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகம் நன்றியுரை வழங்கினார்.
0 Comments