திருநெல்வேலி -நவ -12,2024
Newz -webteam
திருநெல்வேலி காவல் சரகத்தின் மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தை காவல் துறைத் துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., இன்று திருநெல்வேலி காவல் சரக அலுவலகத்தில் நடத்தினார். அதில் திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரடியாகவும், அம்மாவட்டங்களைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களும், துணைக்காவல் கண்காணிப்பாளர்களும் காணொளி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.
இக்கலந்தாய்வு கூட்டத்தில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை சம்மந்தப்பட்ட வழக்குகள், சொத்து சம்மந்தப்பட்ட வழக்குகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொடுங்குற்ற வழக்குகள், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள், சாதிய ரீதியிலான விரோதத்தின் அடிப்படையில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, புலன்விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளில் நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள் இறுதி அறிக்கை தயார் செய்யவும்,
வழக்கினை விரைவாக நீதிமன்ற கோப்பிற்கு எடுத்து நீதிமன்ற விசாரணையை துரிதமாக நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், சரித்திர பதிவேடு உள்ள நபர்களையும், பிரச்சனைக்குரிய நபர்களையும் கண்காணித்து சட்டம் ஒழுங்கினை சீராக பேணி பாதுகாத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேலும், திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் சென்ற மாதம் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளில் திறம்பட செயல்பட்டு வழக்குகளில் தண்டனை பெற்றுத்தருவதற்காக சிறப்பாக பணிபுரிந்த, கண்டுபிடிக்க இயலாத, நிலுவையில் இருந்துவந்த வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு புரிந்து வழக்குகளை கண்டறிந்த, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி விழாவில் சிறப்பாக காவல் பணிபுரிந்த காவல் அலுவலர்கள், காவல் ஆளிநர்கள் உட்பட 54 பேரைப் பாராட்டி அவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ஏ.சுந்தரவதனம், இ.கா.ப., (கன்னியாகுமாரி), திரு.ஆல்பர்ட் ஜான், இ.கா.ப., (தூத்துக்குடி), திரு.வி.ஆர். ஸ்ரீனிவாசன்,
(தென்காசி), திரு.நை.சிலம்பரசன், (திருநெல்வேலி), ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments