திருநெல்வேலி – ஜீலை -29,2023
newz – webteam
கல்லீரலைத் தாக்கும் ஹெபடைடிஸ் கிருமிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்லீரலைக் காக்கவும் ஹெபடைட்டிஸ் பி வைரஸைக் கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் பிறந்த தினமான இன்று அவரது நினைவாக உலக ஹெபடைடிஸ் தினம் உலகமெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி, நமது திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி முதல்வர் மரு.ரேவதி பாலன் MD முன்னிலையில் உலக கல்லீரல் அழற்ச்சி தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக உயர் சிறப்பு மருத்துவமனை கண்காணிப்பாளரும், கல்லீரல் மற்றும் குடல்நல , மருத்துவப் பிரிவு துறைத் தலைவருமான மரு.கந்தசாமி என்ற குமார் வரவேற்பு உரை ஆற்றினார். நிகழ்ச்சியில் திருநெல்வேலி இந்திய மருத்துவக்கழக தலைவர் மரு. சுப்ரமணியன், செயலாளர் மரு. இப்ராஹிம், நிதி செயலாளர் மரு.பாபுராஜ் பங்கேற்று சிறப்பித்தனர் .திருநெல்வேலி இன்னர்வீல் க்ளப் சார்பாக தலைவர் மீனா சுரேஷ்,பவித்ரா,பாரதி,சுமன்,ஜெயலட்சுமி,மேகலா ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர்.சிறுநீரகவியல் பிரிவு துறைத் தலைவர் மரு. இராமசுப்பிரமணியம், உதவி உறைவிட மருத்துவர் ரவி, எஸ்தர்,செவிலியர் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவிகள் பி.எஸ்.சி பாரா மெடிக்கல் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியில் கல்லீரல் பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு முழக்கங்களை கூறியும் சென்றனர். நிகழ்ச்சியில் ஹெபடைடிஸ் பி’ வைரஸால் ஏற்படும் மஞ்சள் காமாலை நோய் குறித்தும், அதன் வகைப்பாடு குறித்தும் விளக்கப்பட்டது. இந்த வைரஸ், ஏ, பி, சி, டி மற்றும் இ என்று, ஐந்து வகையில் இருந்தாலும், “ஏ மற்றும் இ’ வைரஸ் கிருமி, நம்முடைய கை சுத்தம் செய்யாமல் உணவு உட்கொள்வதால் தாக்குகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு, ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்றும் மற்ற மூன்று ஹெபடைடிஸ் வைரஸ் கிருமிகளும், ரத்தம் வழியாக, பாதுகாப்பற்ற உடல் உறவாலும் மேலும் சுகாதார முறையில் பராமரிக்கப்படாமல் பச்சை குத்துதல், காது குத்துதல் மற்றும் ஒரே ஷேவிங் செட்டை பலர் உபயோகித்தல், போன்றவற்றால், இந்த வைரஸ் கிருமி பரவுகிறது. இக்கிருமி தாக்கிய சில நாட்களில், உடல் சோர்வு, மூட்டுவலி, வாந்தி, வலதுபுற அடி வயிற்றுவலி ஆகியவை ஏற்படும். ஹெபடைடிஸ்’ வைரஸ் தாக்காமல் இருக்க, குழந்தை பிறந்து, 24 மணி நேரத்துக்குள், “இமினோகுளோபின்’ தடுப்பூசி போட வேண்டும். அதை தொடர்ந்து, ஒன்று மற்றும் ஆறு மாதத்துக்குள், மூன்று முறை தடுப்பூசி போட வேண்டும். பெரியவர்களுக்கு ஹெபடைடிஸ் வைரஸ் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில், அரசு மருத்துவமனையில், “ஹெச்.பி.எஸ்.எ.ஜி.,’ என்ற ரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் கர்ப்ப கால கல்லீரல் அலற்சி நோயை கண்டுபிடிக்கும் பரிசோதனை, மருத்துவமனையில் பணிபுரியும் முன் கள பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்க்கு ஹெபடைடிஸ் பி தடுப்பூசி மற்றும் பைப்ரோஸ்கேன் பரிசோதனை நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவாக உதவி பேராசிரியர் மரு. ஷபிக் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை குடல் கல்லீரல் மருத்துவ சிறப்புப்பிரிவின் துறைத்தலைவர் பேராசிரியர் மரு. கந்தசாமி என்ற குமார் சிறப்பாக செய்து இருந்தார். நிகழ்ச்சியை செவிலியர் பயிற்றுநர் செல்வன் தொகுத்து வழங்கினார்.
0 Comments