தூத்துக்குடி – ஜீன் -27,2024
Newz -webteam
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் உள்ள கனி பேலஸில் வைத்து மாவட்ட காவல்துறை சார்பாக அனைத்து சமுதாய தலைவர்கள் சமூக நல்லிணக்க கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவித சண்டை சச்சரவு இல்லாமல் மக்கள் அமைதியான முறையில் இருப்பதற்கும், யாரும் குற்ற செயல்களில் ஈடுபட்டு தங்களது எதிர்காலத்தை தொலைத்துவிடாமல் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றம்மில்லா மாவட்டமாக மாற்றுவதும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் ஆகும். கோபப்பட்டு குற்ற செயலில் ஈடுபடுவன் அவனது எதிர்காலத்தை இழப்பதோடு அவனது குடும்பமும் பாதிப்படையும். பழிக்குப்பழி எண்ணம் ஒரு குடும்பத்தை மட்டுமல்லாது ஒரு தலைமுறையை அழித்துவிடும்.
பழிக்குபழி என்ற எண்ணத்தை கைவிட்டு, ஜாதி வேறுபாடுகளை களைந்து அனைவருடனும் ஒற்றுமையாக வாழ்ந்து இந்த சமுதாயத்தை நல்ல முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். நாம் அனைவரும் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும். நாம் மட்டுமல்ல நமது எதிர்கால சந்ததியினரும் நிம்மதியாக வாழ வேண்டும். அதற்கு அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்துடனும் இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் இருந்த 6000ற்கும் மேற்பட்ட ஜாதி அடையாளங்களை பொதுமக்களாகிய நீங்கள் தாமாக முன்வந்து அவற்றை நீக்கி, ஜாதி அடையாளங்களை நீக்கியதில் தூத்துக்குடி மாவட்டத்தை தமிழ்நாட்டின் முதன்மை மாவட்டமாக மாற்றிய பெருமை உங்களையே சேரும். இனியும் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களாகிய நீங்கள் தொடர்ந்து பொது இடங்களில் ஜாதி அடையாளங்கள் இல்லாமல் கடைபிடிக்க வேண்டும்.
உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து சுமூகமாக தீர்ப்பதற்கு முயல வேண்டும். நம்முடைய சந்ததிகளுக்கு நிம்மதியான மகிழ்ச்சியான சமுதாயத்தை உருவாக்கி கொடுப்பது நமது பொறுப்பாகும். அதனால் நாம் ஜாதி வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக இருந்து நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.
அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினரின் முன்னிலையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
1. கோவில் திருவிழாக்களில் சமூக நல்லிணக்கம் குலையும் வகையில் சாதிகள் பெயர் மற்றும் அடையாளங்கள் பொறித்த பனியன்கள் அணியவோ மற்றும் கொடிகள் கொண்டு வரவோ மாட்டோம்.
2. அசாதாரண முறையில் அல்லது பிரச்சினையினால் இறந்தவர்களின் பிறந்த மற்றும் மறைந்த நாட்களில் அவர்கள் குடும்பத்தினர் தவிர மற்றவர்கள் அவர்கள் நினைவிடத்திற்கு வருவதையோ, அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சணை ஏற்படுவதையோ எவ்வகையிலும் ஊக்குவிக்க மாட்டோம்.
3. உரிய அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ் பேனர்களை எவரேனும் சேதப்படுத்தும் பட்சத்தில் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்வோமே தவிர, பழிவாங்கும் விதமாக மற்ற சமுதாயத்தினரின் ப்ளக்ஸ் பேனர்களை எவ்வகையிலும் சேதப்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சணையை ஏற்படுத்த முயல மாட்டோம்.
4.வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வது, தனிப்பட்ட இரு குடும்பத்தைச் சார்ந்த நிகழ்வு என்பதை கருத்தில் கொண்டு, இதற்காக சாதி மற்றும் மதத்தின் பெயரை சொல்லி சட்டம் ஒழுங்கு பிரச்சணையை ஏற்படுத்த முயல மாட்டோம்.
5. அசாதாரண முறையில் அல்லது பிரச்சினையினால் இறந்தவர்களின் பிறந்த மற்றும் மறைந்த நாட்களில் இரு சக்கர வாகன பேரணியாகவோ, சாதிகள் பெயர் மற்றும் அடையாளங்கள் பொறித்த பனியன்கள் அணிந்து வரவோ மற்றும் கொடிகள் கொண்டு வரவோ மாட்டோம்.
6.இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையே பிரச்சணை உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மூலமாக சட்டப்படி தீர்வு காணவேண்டுமே தவிர, தன்னிச்சையாக பேசி பிரச்சணையை மேலும் பெரிதாக்க மாட்டோம்.
7. சமூக வலைதளங்களில் மற்ற சமுதாயத்தைப் பற்றியோ / சமுதாய தலைவர்கள் பற்றி பழித்தோ / எதிராகவோ எவ்வித தகவல்களையும் பதிவிட மாட்டோம். அவ்வாறு பதிவிடுபவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளும் போது, அவர்களுக்கு சமுதாய ரீதியாக ஆதரவளிக்க மாட்டோம்.
8. இறந்தவர்களின் உடல்களை பெறுவதில் காலம் தாழ்த்தவோ, சமுதாய ரீதியாக மேற்கொண்டு பிரச்சணைகள் உருவாகும் வகையிலோ செயல்பட மாட்டோம்.
9.சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை சமுதாய ரீதியாக எவ்வகையிலும் ஆதரிக்கவோ, பண உதவிகள் செய்யவோ மாட்டோம். 10.சமுதாய வேறுபாடுகளை மறந்து, மனித நேயத்துடன் அனைத்து சமுதாயமும் ஒற்றுமையாக வாழ நாங்கள் முன் நிற்போம் என உறுதி அளிக்கிறோம்.” என்னும் உறுதிமொழியை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவரும் ஏற்று குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த சமூக நல்லிணக்க கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் எடிசன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி ஊரகம் ராஜசுந்தர், திருச்செந்தூர் . வசந்தராஜ், ஸ்ரீவைகுண்டம் மாயவன், மணியாச்சி லோகேஸ்வரன், கோவில்பட்டி வெங்கடேஷ், விளாத்திகுளம் ராமகிருஷ்ணன், சாத்தான்குளம் கென்னடி உட்பட காவல்துறையினர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாய தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 Comments