

திருநெல்வேலி – செப் -16,2025
Newz – Webteam
2.5 ஆண்டுகளுக்குப் பிறகு பல் பிடுங்கிய வழக்கு முக்கிய கட்டத்திற்கு நகர்ந்தது நெல்லை கோர்ட்டில் ஆஜரானார் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்
அக்டோபர் 13ம்தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களைப் பிடுங்கி சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 14 காவலர்களும் நேற்று நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அனைவரும் ஆஜரானதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த மாதம் 13-ம்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சத்யா உத்தரவிட்டார். இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு முக்கிய கட்டத்திற்கு நகர்ந்து உள்ளது.
அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி-யாக பல்வீர் சிங் பணியாற்றியபோது, பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களைப் பிடுங்கி கொடூரமாக சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, பல்வீர் சிங் மற்றும் அவருடன் பணியாற்றிய காவல் ஆய்வாளர், காவலர்கள் உட்பட 14 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு, நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்யா முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது.
முதல் வாய்தா 2023ம் ஆண்டு 12ம்தேதி தொடங்கியது. இந்த வழக்கை மனித உரிமை மீறலாகக் கருதி, நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு (மனித உரிமை நீதிமன்றம்) மாற்றக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தாக்கலான பிறகு கடந்த ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் தொடர்ந்து நான்கு வாய்தாக்களில் பல்வீர் சிங் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இது வழக்கின் விசாரணையில் தாமதத்தை ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால் மாதத்திற்கு இரண்டு வாய்தாக்கள் போடப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 26ம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு அனைவரும் ஆஜராகினர்.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பல்வீர் சிங் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அனைவரும் ஆஜரானதைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, அடுத்தகட்ட விசாரணையை அடுத்த மாதம் 13ம்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதுவரை மொத்தம் 26 வாய்தாக்கள் நடந்துள்ளன. அதில் 14 வாய்தாக்களில் ஐபிஎஸ் அதிகாரி பல்சர் சிங் ஆஜராகவில்லை. 12 வாய்தாக்களில் மட்டுமே அவர் ஆஜராகினார்.
நீதிமன்ற விசாரணையில் இதுவரை குற்றச்சாட்டுகள் வனைதல் நிலையில் இருந்தது. தற்போது வழக்கின் முக்கிய கட்டமான விசாரணை நிலைக்கு நகர்ந்து உள்ளது. இனி வரும் வாய்தாக்களில் குற்றசாட்டுகள் குறித்து நீண்ட விசாரணையை நீதிமன்றம் கையில் எடுக்கும். இதனால் பல் பிடுங்கப்பட்ட வழக்கில் நீதிமன்ற விசாரணை சூடு பிடித்துள்ளது.
0 Comments