தூத்துக்குடி – ஜீன் – 29,2024
Newz – webteam
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு “மகிழ்ச்சி” எனும் காவலர் குடும்ப நல மையம் மூலம் மனநல பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி பிஷப் ரோச் ஹாலில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு “மகிழ்ச்சி” என்ற காவலர் குடும்ப நல மையம் மூலம் பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் இன்று தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி பிஷப் ரோச் ஹாலில் வைத்து நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட ஆயுதப்படை ஆகியவற்றில் இருந்து காவல்துறையினர் 280 பேர் கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், காவல்துறையினருக்கு பல பணிகள் இருந்தாலும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கிடைக்கும் நேரத்தை குடும்பத்தினருடன் செலவழிப்பதன் மூலம் மனநலம் மேம்படும். உங்கள் பொன்னான நேரத்தை உடற்பயிற்சி செய்வதில் செலவிட்டு உடல் நலத்தை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். உணவே மருந்து என்பதை கடைப்பிடித்து நல்ல உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நம் எண்ணங்கள் தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதை உணர்ந்து நேர்மறையான எண்ணங்களுடன் இருந்தால் வாழ்க்கை மிக மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்றும் அறிவுரைகள் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த மகிழ்ச்சி வகுப்பில் மகிழ்ச்சி திட்டத்தின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா, தூத்துக்குடி ரங்கசாமி மருத்துவமனை மனநல மருத்துவர் சிவசைலம் மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மீகா ஆகியோர் காவல்துறையினருக்கு மனநலம் குறித்து பயிற்சி அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பொன்னரசு, மற்றும் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
0 Comments