சென்னை – ஜீலை -07,2023
newz – webteam
டிஐஜி விஜயகுமார் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்” – தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால்
டிஐஜி விஜயகுமார் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார் எனவும் அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது
கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இவர் பணியாற்றியுள்ளார்.
அதேபோல சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.
குரூப் 1 தேர்வு எழுதி டிஎஸ்பியாக பதவி ஏற்றபின் இரு ஆண்டுகளுக்கு பின்பு ஐபிஎஸ் தேர்வில் தமிழ் வழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர், முதன்முதலாக வள்ளியூரில் ஏஎஸ்பியாக பதவி ஏற்றார். சாத்தான்குளம் இரட்டை கொலை சிபிசிஐடி எஸ் பி ஆக அப்பொழுது பணியாற்றி விசாரணை நடத்தினார்.
மனைவியுடன் கோவையில் தான் வசித்து வந்த அவர் இன்று காலையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபயிற்சி முடித்து வீடு திரும்பிய பின்னர் தற்கொலை செய்துள்ளார். நேற்று சக அதிகாரி ஒருவரின் மகளின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயகுமார். இன்று காலையில் சுமார் 6.50 மணியளவில் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…
டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை மிகவும் வருந்ததக்கது. அவர் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். ஐ.ஜி.சுதாகர் நேற்று முன் தினம் மன உளைச்சல் இருந்த காரணத்தால் அவருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மன உளைச்சல் இருந்த காரணத்தால் அவரது மனைவி வரவழைக்கபப்ட்டுள்ளார்.
மனைவியுடன் இருந்த போதே இந்த தற்கொலை முடிவை டிஐஜி விஜய்குமார் எடுத்துள்ளார். அவரது தனிப்பட்ட பிரச்சினை என்பதையே அவர் குறிப்பிட்டுள்ளார். குடும்ப பிரச்சினை என்பதால் அதனை போலீஸ் தலையிட முடியாது. எனினும் தற்கொலை குறித்து ஐ.ஜி.சுதாகர் தலைமையில் காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
0 Comments