சென்னை ஆவடி – அக் -02,2023
newz – webteam
தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்த ‘‘போதையில்லா தமிழ்நாடு‘‘ என்ற பிரச்சார திட்டத்தை, பொதுமக்களிடையே எடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வை தொடர்ந்து வலியுறுத்தி, இளைஞர்களை போதை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் தடுத்து, வாழ்வியல் முறையில் நல்வழிபடுத்தவும், ஆரோக்கியம் மற்றும் உடலை பேணி காப்பதற்காக, விளையாட்டில் ஈடுபடுத்தி ஊக்குவிக்கவும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அறிவுறுத்தலின்பேரில் சென்னை பெருநகர காவல்துறை (GCP), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் (Avadi Commissionerate) இணைந்து, “ஆவடி இரவு மாரத்தான்-2023, பாகம்-2” என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இரவு மாரத்தான் போட்டிகள் மிகக் குறைவாக நடத்தப்படுகிறது. இது போன்ற மாரத்தான் போட்டி நிகழ்வை நடத்துவதன் மூலம் சென்னை பெருநகரம் இரவு மாரத்தான் வரைபடத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் மாலை நேரம் ஓடுவதற்கு சிறந்த நேரம் ஆகும். நட்சத்திரங்களின் கீழ் ஓட இதுவே சிறந்த வாய்ப்பு ஆகும். இரவு மாரத்தான் தீவிர ஓட்டப்பந்தய வீரர்களிடையே பெரும் புகழ் பெறுவதால், இந்த நிகழ்வு பல்வேறு ஓட்ட பந்தய வாய்ப்புகளை வழங்குகிறது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப (02.10.2023 ) மாலை ஆவடி, Vel Tech Rangarajan Dr.Sagunthala R&D Institute of Science and Technology வளாகத்தில், ஆவடி காவல் ஆணையாளர் K.சங்கர், இ.கா.ப முன்னிலையில் “ஆவடி இரவு மாரத்தான்-2023 பாகம்-2” என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கொடியசைத்து, துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த ஆவடி இரவு மாரத்தான்-2023, பாகம்-2 போட்டியானது 1/2 மாரத்தான் (21 கி.மீ.), 10 கி.மீ., 5 கி.மீ. ஆகிய 3 பிரிவுகளில் நடைபெற்ற போட்டி வேல் டெக் பல்கலைக்கழகத்தில் தொடங்கி, மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக நெமில்லிச்சேரி சுங்கச்சாவடி வரை மேற்படி 3 பிரிவுகளின் தூரத்தை கடந்து மீண்டும் வேல் டெக் பல்கலைக்கழகத்தில் முடிவடைந்தது. ஓட்டப்பந்தய வீரர்களுக்கு அனைத்து போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. உணவு, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த மாரத்தான் நிகழ்வில் 5 கி.மீ. தூர மாரத்தன் பிரிவுக்கு 15 வயதுக்கு மேற்பட்டவர்களும், 10 கி.மீ. மற்றும் 21 கி.மீ. தூர மாரத்தன் பிரிவுகளுக்கு 8 வயதுக்கு மேற்பட்டோருக்கும் அனுமதி வழங்கப்பட்டு கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பதக்கங்கள், பண வெகுமதிகள் மற்றும் சான்றிதழ்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கினார்.
சுமார் 6,000 பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சென்னை பெருநகர காவல் துறை, ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து, வேல் டெக் பல்கலைக்கழகம், தி ஹிந்து, சென்னை ரன்னர்ஸ், வேலம்மாள் நெக்சஸ், CPCL நிறுவனம், பனிமலர் பொறியியல் கல்லூரி மற்றும் மெரிடியன் மருத்துவமனை ஒத்துழைப்புடன் இப்போட்டி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (வடக்கு) ஆஸ்ரா கர்க், இ.கா.ப, R.சுதாகர், இ.கா.ப (போக்குவரத்து) இணை ஆணையாளர்கள் மருத்துவர்.P.விஜயகுமார் (ஆவடி) M.மனோகர், இ.கா.ப, (மேற்கு மண்டலம்), துணை ஆணையாளர்கள் ஸ்ரேயா குப்தா, இ.கா.ப, (பூக்கடை) R.சக்திவேல், (வண்ணாரப்பேட்டை) S.சக்திவேல், (கொளத்தூர்), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments