சென்னை – ஜன -27,2024
Newz – webteam
சென்னையில் சுமார் ரூபாய் 23.25 கோடி மதிப்பிலான 93 கிலோ மெத்தகுலோன் போதைப்பொருளுடன் இருவர் கைது.
போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு சிஐடியின் சென்னை பிரிவிற்கு போதைப்பொருட்களின் விற்பனை குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஒரு சிறப்பு குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழு 26-ம் தேதி நேற்று திருவொற்றியூரைச் சேர்ந்த நீலமேகன்,50 என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 25 கிலோ மெத்தகுலோன் போதைப்பொருளை கைப்பற்றியது.
மேலும், இதில் தொடர்புடைய வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 33 வயதுடைய மற்றொரு குற்றவாளியான சம்சுதீனை கைது செய்து அவரது வீட்டிலிருந்து 68 கிலோ மெத்தகுலோனை கைப்பற்றியது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு இந்தியாவில் தோராயமாக ரூ. 23.25 கோடி மற்றும் சர்வதேச மதிப்பு பலமடங்கு ஆகும். மேலும், இக்குழுவினர் 97 கிலோ ஆம்ரோஸ் எனும் வேதிப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர். இதன் தன்மையை ஆய்வக சோதனைகள் மூலம் கண்டறியப்பட வேண்டியுள்ளது. இது தொடர்பாக சென்னை என்.ஐ.பி.சிஐடியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளின் முழு சங்கிலியையும் வெளிக்கொண்டு வர விசாரணை நடத்தப்பட்டு வரப்படுகிறது. மேற்படி சிறப்பு காவல் குழுவினரை குற்றம் மற்றும் அமலாக்க கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப பாராட்டி பண வெகுமதி அளித்தார்.
போதைப்பொருள் மற்றும் மனமயக்கப்பொருள்களின் சட்ட விரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை இலவச தொலைபேசி எண். 10581 வாட்ஸ்அப் எண். 949841058 மற்றும் மின்னஞ்சல் [email protected] மூலம் பகிருமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது
0 Comments