தூத்துக்குடி – ஆகஸ்ட் -19,2023
newz – webteam
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தம்மாள் காலனி பகுதியிலுள்ள அழகர் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற ‘வீட்டுக்கொரு விஞ்ஞானி ” என்ற அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தம்மாள் காலனி பகுதியிலுள்ள அழகர் பப்ளிக் பள்ளியில் புதியதலைமுறை தொலைக்காட்சி மற்றும் அழகர் பப்ளிக் பள்ளி இணைந்து எதிர்கால விஞ்ஞானிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஓர் முயற்சியாக ‘வீட்டுக்கொரு விஞ்ஞானி “ என்ற அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. மேற்படி இந்நிகழ்ச்சியை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு மாணவர்களிடம் கலந்துரையாடினார். இக்கண்காட்சியில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 67 பள்ளிகளில் இருந்து 600 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு 300 அறிவியல் படைப்புகள் வைக்கப்பட்டது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், இந்நிகழ்ச்சியின் நோக்கம் எதிர்கால விஞ்ஞானிகளை உலகிற்கு அறிமுகபடுத்தும் ஓர் முயற்சியாகும். மனிதன் தோன்றிய காலத்தில் அவனுடைய சிறிய சிறிய கண்டுபிடிப்புகளே தற்போதைய கண்டுபிடிப்புகளின் முன்னோடியாகும். மாணவர்கள் கல்வியோடு தங்களது திறமைகளையும் கண்டுபிடித்து வளர்த்துகொள்ள வேண்டும். உங்களது திறமைதான் உங்களை வருங்காலங்களில் சாதனையாளர்களாக மாற்றும். இந்த வயதில் தோல்விகளை கண்டு துவண்டுவிடக்கூடாது, அந்த தோல்வியை அடுத்த வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றினால் நாமும் வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றியாளர்கள்தான். எதிர்மறையான சிந்தனைகளை விடுத்து நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு வாழ்வில் சிறந்த முறையில் முன்னேற வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாணவ மாணவிகளிடம் அறிவியல் குறித்து கலந்துரையாடி கேட்ட கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதிலளித்த ஒரு மாணவன் மற்றும் மாணவிக்கு சால்வை அணிவித்து பாராட்டி இனிப்புகள் வழங்கினார்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லா மாவட்டமாக மாற்றும்பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி அனைத்து உட்கோட்ட காவல்துறையினர் கடந்த ஒரு வருடமாக ‘ மாற்றத்தை தேடி” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் பயனாக கடந்த 15.08.2023 சுதந்திர தினத்தன்று புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலந்தா, சிங்கத்தாகுறிச்சி மற்றும் காசிலிங்காபுரம் ஆகிய கிராம மக்கள் தாமாக முன்வந்து தங்கள் பகுதிகளில் உள்ள பொது இடங்களில் இருந்த 102 ஜாதிய அடையாளங்களை வெள்ளை நிற பெயிண்டால் அழித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிராம மக்கள் தாமாக முன்வந்து தங்கள் கிராமங்களில் உள்ள பொது இடங்களில் இருந்த 561 ஜாதி அடையாளங்களை அழித்துள்ளனர். மேலும் இந்த மாதம் இறுதிக்குள் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் இருக்கும் பொது இடங்களில் உள்ள ஜாதிய அடையாளங்களை அழிப்பதற்காக பொதுமக்கள் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், தங்கள் மற்றும் தங்கள் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி தாமாக முன்வந்து ஜாதிய அடையாளங்களை அழித்த அனைத்து கிராம மக்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த மேலாளர் ராஜா, அழகர் பப்ளிக் பள்ளியின் தலைவர் ஜெயராமன், பள்ளி முதல்வர் . தீபாஸ்ரீ ஷர்மா, பள்ளி தாளாளர் திருமதி. ப்ரியதர்ஷினி, பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி தீரஜ்பிரசன்னா உட்பட பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் உட்பட காவல்துறையினர் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
0 Comments