திருநெல்வேலி – அக் -17,2025
Newz – Webteam



தீபாவளி கொண்டாட்டம் தீ விபத்தாக மாறாமல் இருக்க… சாப்டர் பள்ளியில் தீயணைப்புத் துறை நடத்திய தீ தடுப்பு ஒத்திகை!
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், கொண்டாட்டங்கள் சோகமாக மாறிவிடக்கூடாது என்ற உயரிய நோக்குடன், திருநெல்வேலி மாநகர தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பில் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் தீ தடுப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த செயல்முறை விளக்க ஒத்திகை நடைபெற்றது.
பள்ளி வளாகம் தீயணைப்பு வீரர்களின் திடீர் வருகையால் பரபரப்பானது. மாநகர தீயணைப்பு நிலைய அலுவலர் (போ) சுரேஷ் குமார் தலைமையிலான வீரர்கள் குழு, கூடி இருந்த 2100 மாணவர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவதற்கான வழிமுறைகளை தத்ரூபமாக செய்து காட்டினர்.
முதலில், வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டரில் திடீரென தீப்பற்றினால் பதற்றமின்றி ஈரமான சாக்கு அல்லது போர்வையைக் கொண்டு மூடி அணைப்பது எப்படி என்பதை செய்து காட்டியபோது மாணவர்கள் ஆவலுடன் பார்த்தனர்
அதனைத் தொடர்ந்து, தீயணைப்பான்களைக் கொண்டு ஆரம்பக் கட்டத்திலேயே தீயை கட்டுப்படுத்தும் முறை விளக்கப்பட்டது.
வெறும் தீயை அணைப்பது மட்டுமின்றி, தீ விபத்தில் சிக்கியவர்களை புகை மண்டலத்தில் இருந்து மீட்பது எப்படி, அவர்களுக்கு சுவாசக் கருவி பொருத்தி முதலுதவி செய்வது எப்படி என்பது குறித்தும் வீரர்கள் செய்து காட்டியபோது அனைவரும் உன்னிப்பாக கவனித்தனர். ஒரு மாணவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக கைகளில் தூக்கிச் சென்ற காட்சி, மீட்புப் பணியின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. எதிர்பாராதவிதமாக நம் உடையிலேயே தீப்பற்றினால், உடனடியாக தரையில் படுத்து உருண்டு தீயை அணைக்கும் முறையையும் விளக்கினர்.
இந்த செயல்முறை விளக்க ஒத்திகை, வரவிருக்கும் தீபாவளியைப் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வை அனைவர் மனதிலும் ஆழமாக விதைத்தது. இது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக ஆசிரியர்களும் மாணவர்களும் தெரிவித்தனர்.
0 Comments