தூத்துக்குடி – ஜீன் -04,2023
newz – webteam
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் இன்று காவல்துறையினரின் சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் இன்று தூத்துக்குடி மில்லர்புரத்திலுள்ள ஆயுதப்படை வளாகத்தில் சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தாலுகா காவல் நிலையம், ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் தருவைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாலை உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இரத்த தானம் வழங்கினர்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், இரத்ததானம் என்பது ஒரு உயிரை காப்பாற்றக்கூடிய ஒரு உன்னதமான செயலாகும். நாம் பிறருக்கு இரத்ததானம் அளிப்பதன் மூலம் நமது ஆரோக்கியத்திற்கும் நல்லது மட்டுமல்லாமல், இன்னொரு உயிரையும் காப்பாற்ற முடியும். இந்த முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் அளித்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். பொதுவாக பலருக்கு உடல் ரீதியாக ஏதாவது பிரச்சனைகள் இருக்கலாம், அதை நினைத்து, நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அது மேலும் தீவிரமாகத்தான் செய்யுமே தவிர இயல்பு நிலைக்கு கொண்டு வருவது மிகவும் கடினம், நமக்கு ஒன்றுமில்லை, நம்மால் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு பிரச்சனைக்குரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது அது எளிதில் சீராகி நல்ல உடல் ஆரோக்கியத்தை பெற முடியும். நம்மால் பிறருக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு எந்த ஒரு பிரச்சனையையும் தைரியத்தோடு அணுக பழகவேண்டும். ‘எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பது போல் நமது சிந்தனைகள் நேர்மறையாக இருந்தால் நாமும் வாழ்க்கையில் சிறந்து விளங்க முடியும். உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு நன்றி, மன்னியுங்கள் என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை சொல்லிக் கொடுத்து வளருங்கள். நீங்களும் ஏதாவது சிறிய தவறுகள் நடந்துவிட்டால் சம்மந்தப்பட்டவர்களிடம் மன்னித்துவிடு சகோதரா (Sorry Brother) என்றும், ஒருவர் உங்களுக்கு ஏதாவது உதவி செய்தால் நன்றி (Thank you) என்றும் கூறிப்பாருங்கள் நமது சமுதாயம் எந்த பிரச்சனைகளும் இல்லாத மகிழ்ச்சியான சமுதாயமாக அமையும். காவலர்களாகிய நீங்களும் பொதுமக்களிடம் இனிமையான முறையில் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்ளுங்கள். நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளும்போது நமது மனமும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
மேலும் அவசர உதவிக்காக இரத்தம் தேவைப்படும் பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அலுவலக தொலைபேசி எண்: 0461 2310351 என்ற எண்ணிற்கு அழைத்து இரத்தம் பெறலாம் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன் தலைமையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனை முருகன், ஆயுதப்படை தலைமைக் காவலர் ராஜா மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த சேமிப்பு வங்கி மருத்துவ அலுவலர் சாந்தி, செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் மருத்துவர். அச்சுதானந்தன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் ஊர்காவல்படை வீரர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.
0 Comments