கன்னியாகுமரி – டிச – 31,2023
Newz – webteam
தினகரன் நாளிதழில் 30.12.23 ஆம் நாள் வெளியிட்ட செய்திக்கு மறுப்பு செய்தி தெரிவித்தல் தொடர்பாக. டிச 30.அன்று தினகரன் நாளிதழில் பீட்டர் மாமா என்ற பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் நடைபெற்றதாக ஒரு செய்தி துணுக்கு வெளியிடப்பட்டிருந்தது. அதில் அந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு பகுதியில் பங்கு பேரவைக்கும் ஒரு குடும்பத்திற்கும் இடையே கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி அமைப்பதில் பிரச்சனை ஏற்பட்டிருந்ததாகவும், அதில் காவல்துறை தலையிட்டு இரு சாராரையும் விசாரணைக்கு மாறிமாறி அழைத்து பிரச்சனையை முடிக்காமல் கிடப்பில் போட்டிருந்ததாகவும் அதை தொடர்ந்து பெண் ஒருவர் ஊரில் மரணமடைந்து அவரது உடலை அடக்கம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலையிட்டு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும், அதை தொடர்ந்து பங்கு பேரவை கூட்டத்தில் இந்த பிரச்சனை தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டபோது காவல்நிலையத்திற்கு பணம் கொடுத்ததாகவும், அதன் விபரம் தேதி வாரியாக குறிப்பிட்டு பட்டியல் படிக்கப்பட்டதாகவும், அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலே சொல்லப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பான செய்தியாகும். அதன் உண்மை விபரம் பின்வருமாறு:
வெள்ளிச்சந்தை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிள்ளைத்தோப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்த தனபாலன் என்ற வளனரசு தன் வீட்டை ஒட்டியுள்ள தேவாலயத்திற்கு (சர்ச்) சொந்தமான நிலத்தில் கழிவுநீர் தொட்டியை கட்டியுள்ளதாகவும், அந்தகழிவுநீர் தொட்டியை நீக்கித்தருமாறு 24.11.23 அன்று பிள்ளைத்தோப்பு கிராம மக்களால் வெள்ளிச்சந்தை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் அந்த புகாரை பெற்றுக்கொண்டு உடனடியாக மனு எண் 590/23 பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக உதவி ஆய்வாளர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிவில் 29.11.23 அன்று வெள்ளிச்சந்தை காவல் உதவி ஆய்வாளர் கணபதிபுரம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு மேற்சொன்ன நிலத்தகராறு சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் எதிர்மனுதாரர் குறிப்பட்ட நிலத்திலிருந்து கழிவு நீர் தொட்டியை அகற்றாததால் 03.12.23 அன்று கிராம மக்களுக்கும் எதிர்மனுதாரர் தரப்பிற்குமிடையே வாய்தகராறும் சச்சரவும் ஏற்பட்டதில் இரு தரப்பினர் மீதும் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக கணபதிபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் அவர்கள் எதிர்மனுதாரரான தன்பால் என்பவருக்கு 05.12.23 அன்றும், 11.12.23 அன்றும் மேற்கண்ட தினங்களில் மேற்சொன்ன ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் எதிர்மனுதாரர் தனது ஆக்கிரமிப்பை அகற்றாத காரணத்தால் கணபதிபுரம் பேரூராட்சி செயல்
அலுவலர் 13.12.23 அன்று மேற்குறிப்பிட்ட ஆக்கிரமிப்பை அகற்ற காவல்துறையின்
பாதுகாப்பை கோரி கடிதம் அளித்திருந்தார். அதன்படி 13.12.23 அன்று காவல்துறை சம்பவஇடத்திற்கு சென்று பாதுகாப்பை வழங்க தயாராக இருந்தபோது செயல் அலுவலர் வரஇயலாத காரணத்தால் ஆக்கரமிப்பை அன்று அகற்ற முடியவில்லை. இதனை தொடர்ந்து கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். காவல்துறையும் வருவாய்த்துறையும் நடத்திய பேச்சு வார்த்தையில் ஓரிரு தினங்களில் இந்த ஆக்கிரமிப்பு முறைப்படி அகற்றப்படும் என்று தெரிவித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனிடையே அன்று இரவு எதிர்மனுதாரர் தனபாலின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அதனை தொடர்ந்து மறு நாள் 14.12.23 அன்று பிள்ளைத்தோப்பு கிராம மக்கள் அந்த ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் இறந்த நபரின் உடலை கிராம பொது மயானத்தில் புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரால் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் ஒரு முடிவு எட்டப்பட்டு எதிர்மனுதாரர் தனபாலின்
குடும்பத்தார், இறந்த நபரின் உடலை தங்களுக்கு சொந்தமான நிலத்தில் நல்லடக்கம் செய்தனர். ஆனால் இறந்த நபரின் கணவர் மாண்பமை உயர் நீதிமன்றம் மதுரை கிளையை அணுகி இறந்த நபரின் உடலை எடுத்து ஊர் பொது மயானத்தில் புதைப்பதற்கான அனுமதியை வாங்கினார். இதனை தொடர்ந்து 15.12.23 அன்று கணபதிபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் அவர்கள் மேற்குறிப்பிட்ட ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டியை முறையாக அகற்றினார். பின்பு 16.12.23 ம் தேதியன்று தன் சொந்த நிலத்தில் புதைக்கப்பட்ட இறந்த நபரின்உடலை எடுத்து ஊர் பொதுமயானத்தில் ஊர்மக்களின் ஒத்துழைப்போடு புதைக்கப்பட்டது
எனவே மேற்குறிப்பிட்ட நிகழ்வில் தொடக்கத்திலிருந்தே காவல்துறை முறையாக மனுவை பதிவு செய்து உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி நிலப்பிரச்சனை என்பதால் சம்மந்தப்பட்ட துறைக்கு உடனடியாக கடிதம் எழுதி தேவையான நேரத்தில் தகுந்த பாதுகாப்பையும் வழங்கினர். காவல்துறை உதவியோடு உட்கோட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் கணபதிபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களால் முறையான வழியில் மேற்குறிப்பிட்ட பிரச்சனைக்குரிய ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவை தகுந்த காவல் பாதுகாப்போடும் கிராமமக்களின் ஒத்துழைப்போடும் நிறைவேற்றப்பட்டது. எனவே மேற்சொன்ன செய்தி குறிப்பு உண்மைக்கு புறம்பாக எழுதப்பட்டுள்ளது என்றும்இதன்மூலம்தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
0 Comments