நாகப்பட்டினம் – பிப் -06,2024
Newz – webteam
நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளே உனக்காக என்ற குறும்படத்தை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி குழந்தைகளுக்கு,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் திரையிடப்பட்டது
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ. கா. ப உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரி குழந்தைகளுக்கு மகளே உனக்காக என்ற தலைப்பின் கீழ் நாகை மாவட்ட காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதன் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினரைக் கொண்டு பெண் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளே உனக்காக என்ற தலைப்பில் குறும்படத்தை தயாரித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறை நண்பர்கள் முன்னிலையில் கடந்த 29.01.2024 அன்று வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த குறும்படத்தை நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் காண்பிக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்கள் அதனை தொடர்ந்து,நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெண் பிள்ளைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் திரையிடப்பட்டது
தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அவர்கள் பள்ளிக் குழந்தைகளிடம் பேசுகையில் காவல்துறையில் தன் கையாண்ட சில முக்கிய வழக்குகளை பற்றி பள்ளி குழந்தைகளிடம் விவரித்தார்கள், அதிலும் திருச்செந்தூரில் தான் பணியில் இருந்த போது ஒரு பெண் குழந்தைக்கு ஏற்பட்ட நிலைமை இனி எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்ற நோக்கத்தில் தான் இந்த குறும்படத்தை தயாரித்து அனைத்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காண்பிக்க வேண்டும் என்ற நோக்கம் ஏற்பட்டதாகவும், படிக்கிற பள்ளி பருவத்தில் ஒழுங்காக படித்து வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள், செல்போன்களை மிகவும் கவனமாக பயன்படுத்துங்கள், உங்களது லட்சிய இலக்கை அடைந்த பின்பே உங்களுடைய திருமண வாழ்க்கையை தேர்ந்தெடுங்கள் என்றும், நீங்கள் அனைவரும் சாதிக்கப் பிறந்த சிங்கப்பெண்கள் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பள்ளிக் குழந்தைகளை ஊக்கப்படுத்தினார்
மேலும் பள்ளி குழந்தைகளிடம் இந்த குறும்படத்தைப் பற்றிய உங்களுடைய கருத்து என்ன என்பதை கேட்ட போது எங்களுக்கு இந்த குறும்படம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் இந்த படத்தில் வரும் நேர்மறை கதாபாத்திரமாக நாங்களும் ஒரு நாள் காவல்துறை அதிகாரியாக வெற்றி பெறுவோம் என்று சில மாணவர்கள் கூறினார்கள், பின்பு பள்ளி தலைமை ஆசிரியர் பேசுகையில் காவல்துறையில் பணிச்சுமை அதிகமாக உள்ள நேரத்திலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி இப்படி ஒரு குறும் படத்தை தயாரித்து எமது பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
0 Comments