நெல்லை – ஆகஸ்ட் -11,2023
newz – webteam
“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்கிற திட்டத்தின் கீழ் போதைப் பொருள்களின் தீமை குறித்து பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை தடுப்பு உறுதிமொழி எடுக்க தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக அனைத்து மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆகஸ்ட் 11 அன்று விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வும் அதனை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு போதைப்பொருள் ஒழிப்பு கூட்டம் மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு வாரத்தைத் செயல்படுத்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள் வளாகத்தில் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் தலைமையில், நிர்வாக அலுவலர் செந்தில்வேல் முன்னிலையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மருத்துவ பயிற்சி மாணவ, மாணவிகள் பாரா மெடிக்கல், செவிலியர் பயிற்சி, மற்றும் துணை செவிலியர் பயிற்சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். பாலசுப்ரமணியம், துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் முகமது ரஃபி, டாக்டர். ஆறுமுகம், மனநலப் பிரிவு மற்றும் போதை மறுவாழ்வு மைய பேராசிரியர். டாக்டர் ராமானுஜம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில், கல்லூரி முதல்வர் பேசியது, போதை இல்லா தமிழகம் மலர இந்த உறுதி மொழியோடு நிறுத்தி விடாமல், போதைப் பொருள்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தீய மாற்றங்கள் குறித்து அடிக்கடி மருத்துவ பயனாளிகளிடமும், நோயாளிகள் உடன் இருப்போரிடமும் நலக்கல்வி ஆற்ற வேண்டும். எக்காரணத்தை கொண்டும் மாணவ கண்மணிகள் இந்த தீய பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளக் கூடாது எனவும் வலியுறுத்தினார். தொடர்ந்து, போதை தடுப்பு விழிப்புணர்வு கைபிரதிகள் வழங்கப்பட்டன. செவிலியர் பயிற்றுநர் செல்வன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
0 Comments