தூத்துக்குடி – ஜீலை 08,2023
newz -webteam
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக யூடியூபர்களுக்கு (Youtuber) தூத்துக்குடி மாவட்டத்தை குற்றங்கள் இல்லாத கிராமங்களாகவும், அமைதியான மாவட்டமாகவும் மாற்றுவதற்கு உறுதுணையாக சைபர் குற்றங்கள், போதைப்பொருள் உட்பட் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், நேர்மறையான செய்திகளையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்டரங்கில் வைத்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள யூடியூபர்களுக்கு (Youtuber) மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் குற்றங்கள், போதைப்பொருள் உட்பட் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், நேர்மறையான செய்திகளையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலனோர் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். சைபர் மோசடியில் ஈடுபடுபவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக பகுதி நேர வேலை வாங்கித் தருவதாகவும், ஆன்லைனில் டிரேடிங் கம்பெனி மூலம் அதிக லாபம் பெறலாம் என்றும், ஆன்லைனில் முதலீடு செய்து அதிக வட்டி மூலம் அதிக பணம் பெறலாம் என்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்து பொதுமக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். அவ்வாறு நினைக்கும் சைபர் குற்றவாளிகள் பொதுமக்கள் ஏமாளிகள் அல்ல என்பதை உணரும் வகையில் யூடியூபர்களாகிய நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் போதைப் பொருள் மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், தனிநபர் புகைப்படங்களை வைத்து, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் மீம்ஸ் உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிடுவதோ, வன்முறையை தூண்டும் வகையில் ஜாதி மற்றும் மத ரீதியான மோதலை உருவாக்கும் வகையில் ஆடியோ, வீடியோ மற்றும் மீம்ஸ் ஆகியவற்றை பதிவிடவோ, மற்றவர்களுக்கு பகிர்வதோ, செய்திகளின் உண்மை தன்மைக்கு புறம்பாக வதந்திகள் பரப்புவதோ சட்டத்திற்கு புறம்பானதாகும். பெண்களுடைய புகைப்படங்களை தேவையில்லாமலோ, அவதூறாகவோ சமூக வலைதளங்களில் வெளியிட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்குவதற்கு வழிவகை உண்டு எனவும் எடுத்துரைத்து நேர்மறையான செய்திகளை பதிவிட்டு தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு தருமாறு கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுதாகரன், அச்சுதன், அபிராமி மற்றும் சைபர் குற்றப் பிரிவு போலீசார் செய்திருந்தனர்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பபு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம் மற்றும் யூடியூபர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments