கோயம்புத்தூர் – ஜீலை – 25,2023
newz – webteam
ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் 2.0-ல் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் …..
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற திட்டத்தின் மூலம் சுமார் 1300 பள்ளிகளில் சுமார் 2,11,000 மாணவ மாணவிகளுக்கு மாவட்ட காவல்துறையினர் மூலம் பாலியல் குற்றங்கள் சம்மந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இது பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் 2.0 என்ற மேம்படுத்தப்பட்ட திட்டத்தினை தொடங்கி இதன் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான விழிப்புணர்வு மற்றும் அதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் யுக்திகளை அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்., இ.கா.ப., அவர்கள் தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கான தற்காப்புக்கலை பயிற்சி வகுப்புகள் கோவில்பாளையம் காவல் நிலைய பகுதியில் உள்ள எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டது. இதில் GI TOKU KAI KARATE SCHOOL SHINKEN SPORTS KARATE ACADEMY-யை சேர்ந்த தற்காப்புக்கலை பயின்ற பெண் பயிற்சியாளர்கள் மற்றும் கோவை மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த தற்காப்புக்கலை பயிற்சி பெற்ற நான்கு பெண் காவலர்கள் மூலம் பள்ளி மாணவிகளுக்கு அவர்களிடம் யாரேனும் தவறாக நடந்து கொள்ள முற்பட்டால் அச்சம் கொள்ளாமல் அவர்களிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கான தற்காப்பு முறைகள் பயிற்றுவிக்கப்பட்டன. இப்பயிற்சி வகுப்பில் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் படிக்கும் சுமார் 59 மாணவிகள் கலந்து கொண்டனர். இது போன்ற தற்காப்பு பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு பள்ளிகளிலும் நான்கு நாட்கள் நடைபெற உள்ளன.
மேலும் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகளிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாணவிகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் அதனை யாரிடம் தெரிவிக்க வேண்டும், எவ்வாறு தெரிவிக்க வேண்டும், மற்றும் அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்கு புரியும் வகையில் எடுத்துக் கூறி அறிவுரை வழங்கினார்.
இப்புதுமையான நிகழ்ச்சி பள்ளி மாணவிகளிடையே பெரிதும் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளதாக மாணவிகளும், ஆசிரியர்களும் தெரிவித்தனர்.
0 Comments