சென்னை – டிச -06,2023
newz – webteam
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், 18,400 காவல் அலுவலர்கள் மிக்ஜாம் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டு, 6,560 பொதுமக்கள் மீட்கப்பட்டு, சாலையில் விழுந்த 465 மரங்கள் அகற்றப்பட்டன. மேலும், தேங்கிய மழைநீர் வெள்ளத்தில் சிக்கிய 489 வாகனங்கள் மீட்கப்பட்டு, 21,967 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜாம் புயல் உருவாகி, கடந்த 03. அன்று இரவு முதல் 04ம்தேதி இரவு வரை, சென்னை பெருநகரில் இடைவிடாது மழை பெய்தது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர், இ.கா.ப., உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் உட்பட காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் 12 காவல் மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினர் என சுமார் 18,400 காவல் அலுவலர்கள் சென்னை பெருநகரில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொண்டும், சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றியும் வருகின்றனர்.
இதன் மூலம் கடந்த 03.12.2023 முதல் இன்று (06.12.2023) காலை வரையில், சென்னை பெருநகர காவல் குழுவினர் மற்றும் மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினர் மூலம், சென்னை பெருநகரில், மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி தவித்த 6.560 பொதுமக்கள் படகுகள் காவல் வாகனங்கள் மூலமும் மீட்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு வசதி செய்து தரப்பட்டது. மேலும், அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இதே போல மருத்துவ உதவி தேவைப்படும் நபர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டதுடன், வயதான நபர்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டது.
மேலும், சென்னை பெருநகர காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருடன் ஒருங்கிணைந்து, சென்னை பெருநகரில் சாலைகளில் விழுந்த 465 மரங்களை அறுத்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தது.இதனைத் தொடர்ந்து, கடந்த 3 நாட்கள் நடைபெற்ற மீட்பு மற்றும் நிவாரண பணியின்போது, சாலைகளில் உள்ள மழைநீரில் சிக்கிய 489 வாகனங்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் அப்புறப்படுத்தப்பட்டது.
மழைநீர் சூழ்ந்த இடங்கள் மற்றும் மீட்கப்பட்ட பொதுமக்களை தங்க வைக்கப்பட்ட இடங்களில் என சென்னை பெருநகர காவல்துறை 21,967 உணவு பொட்டலங்களை வழங்கியது.
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் மீட்பு மற்றும்நிவாரண பணிகளுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக அவசர செயலாக்கமையத்தில், இதுவரை பொதுமக்களின் 1,496 தொலைபேசி அழைப்புகளுக்கு,உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்
அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து பொதுமக்கள் கோரிய மழைநீரில் சிக்கி
தவித்த பொதுமக்களை மீட்டும், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர்
வழங்கியும், வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு
அனுப்பி வைத்தும், மருத்துவ சிகிச்சை, மருந்து பொருட்கள் ஏற்பாடுகள் செய்தும்,
பொதுமக்களின் பல்வேறு குறைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டன.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., சென்னையில் மழைநீர் சூழ்ந்த பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தினார்.மேலும், சென்னை பெருநகரில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்து வரும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை காவல் ஆணையாளர் பாராட்டினார்.
0 Comments