திருச்சி – நவ -22,2023
newz – webteam
திருச்சிமாவட்டம், சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சனமங்கலம் வனப்பகுதியில் ரவுடிகளின் நடமாட்டம் மற்றும் குற்ற செயல்கள் நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி கருணாகரன், காவல் ஆய்வாளர், தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் வினோத் குமார் மற்றும் காவலர்கள் அப்பகுதிக்கு இன்று மதியம் சுமார் 12.00 மணியளவில் சென்று தேடிய போது திருச்சி சென்னை பைபாஸ் ரோடு, சிறுகனூர் ரானே பிரேக் லேன் எதிரே உள்ள மண் ரோட்டில் இடதுபுறம் சுமார் 500 மீட்டர் தொலைவில் காட்டு பகுதியில் ஜெகன் (எ) கொம்பன் ஜெகன் (A+ரவுடி) கையில் பெட்ரோல் வெடிகுண்டு மற்றும் சணல் சுற்றிய நாட்டு வெடிகுண்டுடன் இருந்துள்ளார்.
அதைக்கண்ட காவல் ஆய்வாளர் கருணாகரன், அவரை நெருங்கி சென்று பிடிக்க முயன்ற போது, அவர் கையில் வைத்தருந்த பெட்ரோல் வெடிகுண்டை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது வீசியுள்ளார், அது தவறுதலாக வேறு பக்கம் விழுந்து வெடித்து தீ பிடித்துள்ளது. மீண்டும், காவல் ஆய்வாளர் அருகே சென்று ஜெகனை பிடிக்க முயன்ற போது ஜெகன் காவல் ஆய்வாளர் மீது சணல் வெடிகுண்டை வீசியுள்ளார். உடனடியாக, உதவி ஆய்வாளர் வினோத் குமார் அவரை பிடிக்க முயன்ற போது ஜெகன் (எ) கொம்பன் ஜெகன் கொலை செய்யும் நோக்கில் தான் கையில் வைத்திருந்த வீச்சருவாளால் உதவி ஆய்வாளர் வினோத் குமாரின் இடது கையில் வெட்டியதில் காயம் ஏற்பட்டது. அதை தடுக்க முயன்ற காவல் ஆய்வாளரையும் வெட்டி கொலை செய்ய முயலவே காவல் ஆய்வாளர் கருணாகரன் தற்காப்பிற்காக தான் கையில் வைத்திருந்த பிஸ்டல் மூலம் 2 ரவுண்டு ஜெகனை நோக்கி சுட்டதில் காயமுற்ற ஜெகன் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக இலால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். தற்போது ஜெகனின் பிரேதமானது, பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ளது.
மேலும், காயம்பட்ட உதவி ஆய்வாளர் வினோத் குமார் உடனடியாக இலால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். மேற்படி ஜெகன் (எ) கொம்பன் ஜெகன் மீது 5-கொலை வழக்குகளும் 4-கொலை முயற்சி வழக்குகளும் 19-வழப்பறி வழக்குள் மற்றும் 25-இதர வழக்குகள் ஆக மொத்தம் 53 வழக்குள் உள்ளன. மேலும் விசாரணை அதிகாரியால் நாட்டு துப்பாக்கி, பெட்ரோல் வெடிகுண்டு மற்றும் சணல் நாட்டு வெடிகுண்டு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
0 Comments