அரியலூர் – நவ -05,2023
newz – webteam
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்திற்கு செல்லும் வழியில் வனத்துறைக்கு சொந்தமான முந்திரிக்காட்டில் மனித உடல் ஒன்று தீயில் எரிந்து கொண்டு இருப்பதாக உடையார்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டை போன்று காட்சி அளித்தது. இதையடுத்து பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் பிணமாக கிடந்தது ஆண் என்பதும் அவருக்கு சுமார் 35 வயது இருக்கலாம் என்பது தெரிய வந்தது.
இச்சம்பவம் தொடர்பாக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் தனபாலன் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், ரவி, திருவேங்கடம்,பழனி, ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர விசாரணை ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் பல சிசிடிவி கேமராவை தொடர்ந்து ஆய்வு செய்தும், சந்தேகத்திற்குரிய தொலைபேசி எண்களை ஆய்வு செய்து விசாரித்ததின் பேரில், இறந்தவர் வடகடல் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சுரேஷ்(43) என்பது தெரியவந்தது. அவர் சென்னையில் வேலைசெய்து வந்ததாகவும், அவரது மனைவி அனுப்பிரியா(30) என்பவர் சொந்த ஊரில் தங்கி இருந்ததாகவும், இந்நிலையில் அனுப்பிரியாவுக்கும், ஆலவாய் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவரது மகன் வேல்முருகன்(33) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தங்களது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக உள்ள சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அனுப்பிரியா தனது கணவரை சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வரவழைத்து கள்ளக்காதலனுடன் இணைந்து வெட்டிக்கொலை செய்துள்ளனர். மேற்படி தடயத்தை மறைக்க உடலை சாக்கு பையில் போட்டு வெண்மான்கொண்டான் அரசு வனச்சரக முந்திரிகாட்டில் வைத்து உடலை எரித்துள்ளார்கள் என விசாரணையில் தெரியவந்தையடுத்து, உடையார்பாளையம் காவல் துறையினர் இருவரையும் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
0 Comments