தூத்துக்குடி – நவ -27,2025
Newz – Webteam

தூத்துக்குடி வெள்ள நாயகன் லிமின்டன்: மீனவர் தின விழாவில் நேரில் அழைத்து கவுரவித்த ஆளுநர்!
தூத்துக்குடி பெருவெள்ளத்தில் 48 உயிர்களைத் துணிச்சலாகக் காப்பாற்றிய இளைஞர் லிமின்டனை, உலக மீனவர் தின விழாவிற்கு நேரில் அழைத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கவுரவித்தார். அரசு விருது மறுக்கப்பட்டதாகப் பரவலான ஆதங்கங்கள் எழுந்த நிலையில், ஆளுநரின் இந்தச் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023 டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தைப் புரட்டிப்போட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தின்போது, மணல்குண்டு பகுதியைச் சேர்ந்த லிமின்டன் என்ற இளைஞர், சுமார் 15 அடி உயரத்திற்குப் பாய்ந்தோடிய வெள்ளத்தில் சிக்கித் தவித்த 48 பேரைத் தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றினார். அவர்களில் 12 சிறுவர்கள், 30 பெண்கள் மற்றும் ஒரு கர்ப்பிணியும் அடங்குவர். லிமின்டனின் இந்த வீர தீரச் செயலுக்கு அண்ணா விருது வழங்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முதல் அமைச்சர்கள் வரை பரிந்துரைத்தனர். ஆனால், 2025-ஆம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், (நவ. 24) சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற உலக மீனவர் தின விழாவிற்கு இளைஞர் லிமின்டன் ஆளுநர் மாளிகையிலிருந்து பிரத்யேகமாக அழைக்கப்பட்டிருந்தார். விழாவில் அவரது வீரச் செயலைப் பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அவருக்கு சால்வை அணிவித்து, சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
தமிழகத்தின் தலைவரான ஆளுநரே நேரடியாக அழைத்து அங்கீகாரம் வழங்கியது, லிமின்டனுக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு, உண்மையான தியாகங்கள் ஒருபோதும் மறக்கப்படுவதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.


0 Comments