சென்னை – நவ -18,2024
Newz – Webteam
கட்டிலுக்கு கீழே பதுங்கியிருந்த கஸ்தூரியை காட்டிக்கொடுத்த ‘மல்லிகைப்பூ சென்ட்’ வாசம்!
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார் கஸ்தூரி. கைதில் இருந்து தப்பிக்க முன் ஜாமீன் கோரியிருந்தார் கஸ்தூரி.
கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
இதையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவில், பெண் போலீசார் கொண்ட இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஸ்தூரியை தேடி வந்தனர்.
சென்னை போயஸ்கார்டனில் உள்ள வீட்டில் இருந்து இரவோடு இரவாக தப்பிச்சென்று தலைமறைவாக இருந்த கஸ்தூரியை தனிப்படையினர் தேடி வந்தனர்.
ஒருவார தீவிர தேடுதலுக்கு பின் தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் அருகே பஞ்சகுட்டா எனும் பகுதியில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அரிகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் பதுங்கிருப்பதை தனிப்படையினர் உறுதி செய்தனர். இதையடுத்து நேற்று முன் தினம் ஐதராபாத்தில் தங்கியிருந்து அந்த பண்ணைவீட்டில் சோதனை நடத்தினர் தனிப்படையினர்.
பண்ணை வீடு முழுவதும் தேடியும் கஸ்தூரி இல்லாததால் முதலில் தனிப்படையினர் ஏமாற்றமடைந்தனர். பின்னர்தான் அந்த பண்ணை வீட்டில் ரகசிய அறை இருப்பதை கண்டறிந்தனர். பெண் போலீசார் துணையுடன் அந்த ரகசிய அறையில் தேடியும் கஸ்தூரி இல்லாததால் தனிப்படையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனாலும் அந்த ரகசிய அறையில் மல்லிகைப்பூ சென்ட் வாசம் வீசியது. இதனால் கஸ்தூரி இங்கேதான் இருக்க வேண்டும் என்று உறுதி செய்துகொண்டு, மீண்டும் அந்த ரகசிய அறை முழுவதும் தேடினர். அப்போது கட்டிலுக்கு அடியில் பார்த்தபோது எதன் மீதோ போர்வை போர்த்தி இருந்தது தெரியவந்தது. அந்தப்போர்வையை தனிப்படையினர் வெளியே இழுத்தபோதுதான் தெரிந்தது. அதற்குள் கஸ்தூரி உடலை குறுக்கிக்கொண்டு படுத்துக்கிடந்திருக்கிறார். உடனே கஸ்தூரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர் தனிப்படையினர்.
ஐதராபாத்தில் இருந்து சாலை மார்க்கமாக 13 மணி நேர நீண்ட பயணத்திற்கு பின்னர் நேற்று 12 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர் தனிப்படையினர்.
?வரும் வழியில் இரவில் கஸ்தூரிக்கு பிடித்த உணவை தனிப்படையினர் வாங்கிக்கொடுத்தனர். சாப்பிட்ட ஓட்டலின் கண்ணாடி முன் நின்று உதட்டுச்சாயம் பூசிக்கொண்ட கஸ்தூரி, முகத்தில் பவுடர் பூசிக்கொண்டும் தன்னை அழகுபடுத்திக்கொண்டார்.
?எழும்பூர் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் கந்தூரியிடம் 1 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது கஸ்தூரி அளித்த விளக்கத்தை பதிவு செய்துகொண்டனர். பின்னர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்த பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் கஸ்தூரி.
?‘’நான் பேசியது தவறுதான். நான் சிங்கிள் மதர். எனக்கு மாற்றுத்திறன் குழந்தை இருக்கிறார். குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் சொந்த ஜாமீனில் விடுவிக்க வேண்டும்’’ என்று கஸ்தூரி மன்றாடியும் 29ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவிட்டார் நீதிபதி. இதையடுத்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
?இதற்கிடையில் கஸ்தூரியின் வீடியோ விளக்கம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், தான் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்ததாகவும். படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வரும்போதுதான் போலீசார் தன்னை கைது செய்ததாகவும் கூறியிருக்கிறார்.
?கஸ்தூரி மீது மேலும் பல இடங்களில் பதிவாகியிருக்கும் வழக்கு மீது அடுத்தடுத்து அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது
0 Comments