தூத்துக்குடி – அக் -02,2025
Newz – Webteam




இலங்கைக்கு கடதத முயன்ற ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: தூத்துக்குடியில் இருவர் கைது
தூத்துக்குடி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக இரண்டு சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்ட சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை ‘கியூ’ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு சரக்கு வாகனங்களையும் கைப்பற்றினர்.
தூத்துக்குடி மாவட்ட ‘கியூ’ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் திருமதி விஜய் அனிதாவுக்கு, கடல் வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் நேற்று நள்ளிரவு தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இன்று (அக்டோபர் 2) அதிகாலை சுமார் 12:05 மணியளவில், புல்லாவெளி கடற்கரைக்குச் செல்லும் வழியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இரண்டு அசோக் லேலண்ட் ‘படா தோஸ்த்’ சரக்கு வாகனங்களை (பதிவு எண்கள்: TN 78 MA 2523, TN 92 M 4728) போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது, ஒரு வாகனத்தில் 42 மூட்டைகளும், மற்றொரு வாகனத்தில் 41 மூட்டைகளுமாக, இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 83 பீடி இலை மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு மூட்டையும் சுமார் 30 கிலோ எடை கொண்டதாக இருந்தது.
இதனையடுத்து, வாகனங்களில் இருந்த ஓட்டுநர்களான முள்ளக்காடு, காந்தி நகரைச் சேர்ந்த மதியழகன் (39) மற்றும் திருச்செந்தூர், வெள்ளாளன்விளையைச் சேர்ந்த விஷ் பண் ராஜ் பெபின் (29) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மொத்த மதிப்பு சுமார் 80 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து ‘கியூ’ பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments