புனே – மே 24,2024
Newz – webteam
கார் மோதிய சிறுவனின் ஜாமின் ரத்து : சிறார் மையத்தில் அடைக்க உத்தரவு.
புனே :மஹாராஷ்டிராவில், குடிபோதையில் கார் ஓட்டிச் சென்று, இருவர் உயிரிழக்கக் காரணமான 17 வயது சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை சிறார் நீதிமன்றம் ரத்து செய்தது.
சிறுவனை சீர்திருத்தப் பள்ளியில் 15 நாட்கள் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் சமீபத்தில், ‘பார்ஷ்’ சொகுசு கார் மோதி ஐ.டி., ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.
விசாரணையில், காரை ஓட்டியது ரியல் எஸ்டேட் அதிபரின் 17 வயது மகன் வேதாந்த் என்பதும், அவர் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரிந்தது.
அவருடன் வந்த நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், மைனர் என்பதால் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பல்வேறு நிபந்தனைகளுடன் சிறுவனுக்கு ஜாமின் வழங்கினார்.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு 25 வயதாகும் வரை ஓட்டுனர் உரிமம் வழங்க தடை விதித்து மாநில போக்குவரத்து துறை நேற்று உத்தரவிட்டு உள்ளது.
இதேபோல், அச்சிறுவன் ஓட்டிய 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான பார்ஷ் சொகுசு காரை பதிவு செய்ய 1,758 ரூபாய் செலுத்தாததால், பதிவு எண் வழங்கப்படாமல் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதற்கிடையே, குற்றத்தை கருத்தில் வைத்து அந்த சிறுவனை வயது வந்தவராக கருதவும், அவரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கவும் சிறார் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பு முறையிட்டது.
அதை ஏற்ற நீதிமன்றம், அச்சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து, 15 நாட்கள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்க உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்டு உள்ள சிறுவனின் தந்தை விஷால் அகர்வாலுக்கு இரண்டு நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்தும் முன் அச்சிறுவன், தன் நண்பர்களுடன் இணைந்து இரண்டு மதுபான விடுதி களில் 90 நிமிடங்களில் 48,000 ரூபாய் செலவிட்டுள்ளதை போலீசார் கண்டறிந்தனர்.
0 Comments