தூத்துக்குடி – ஜீலை -20,2023
newz – webteam
கோவில்பட்டியில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவரை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான இந்திய அளவிலான நீட் தகுதி தேர்வில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் அவர்களை கௌரவிக்கும் விதமாக பாராட்டு நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் வைத்து இன்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது, இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் திரு. பிரபஞ்சன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவரது வெற்றிக்கு ஊக்கப்படுத்திய அவரது பெற்றோர் மற்றும் அவரை சுற்றியுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மாணவர்களாகிய நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் போது அதில் குறைந்த மதிப்பெண் பெற்றால் இதுவே இறுதித் தேர்வு என்று நினைத்து மனகவலை அடையாமல் உங்கள் வாழ்க்கையில் இதைவிட வெற்றிக்கான பல வழிகளும் தேர்வுகளும் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கல்வியில் முழு ஈடுபாட்டுடன் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களது குறிக்கோள்களை நேர்மறை சிந்தனையுடன் உயர்ந்த எண்ணங்களாக வைத்துக் கொள்ளுங்கள், அவை நிச்சயமாக உங்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுக்கும், எண்ணமே வாழ்க்கை, நீங்கள் என்னவாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதுவாகவே ஆவீர்கள், தோற்றுவிடுவோம் என்ற எண்ணமே இருக்கக் கூடாது, என்னால் முடியும் என்ற எண்ணத்துடன் முயற்சி செய்தாலே வெற்றி நிச்சயம் கிடைக்கும். எனக்குத் தெரிந்த பலர், அவர்கள் ஏழ்மை நிலையில் இருந்து படித்து வெற்றி பெற்று முன்னேறி வந்தவர்கள். உங்களது குடும்ப சூழ்நிலை, வறுமை, உங்களை சுற்றி இருக்கும் சூழ்நிலை உங்களுக்கு மோசமானதாக கூட இருந்தாலும் படிக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையுடன் முழு முயற்சி எடுத்தால் நிச்சயமாக உங்களால் வெற்றி பெற முடியும், மனதை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும், ஒரு சிறு தவறு நீங்கள் செய்தாலும் உடனடியாக மன்னிப்பு கேளுங்கள், சிறு உதவி உங்களுக்கு யாராவது செய்தாலும் உடனடியாக நன்றி கூறுங்கள் இந்த இரு விஷயங்களும் உங்களது தரத்தை மேம்படுத்தும்.
அதுபோன்று பெற்றோர்களும், உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் வெற்றியாளராக முடியும் என்று கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் மாணவர் பிரபஞ்சன் அவர்களுக்கு சால்வை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும், கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும் கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை வேல்ஸ் கல்வி குழும நிர்வாகம் மற்றும் அதன் உறுப்பினர்கள் செய்திருந்தனர். இதில் ஆர்த்தி மருத்துவமனை மற்றும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர் இயக்குனர் மருத்துவர் கோமதி ராஜப்பா, சென்னை வேலம்மாள் அகாடமியின் தலைவர் உமா மகேஸ்வர ராவ், கோவில்பட்டி வேல்ஸ் பள்ளியின் சேர்மன் திரு. முத்துச்சாமி, பள்ளியின் தாளாளர். நாகமுத்து, பள்ளியின் இயக்குனர் விஜயராணி, வேல்ஸ் கல்வி குழும துறைத்தலைவர் டாக்டர் சுவாமிநாதன் மற்றும் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
0 Comments